குறள் (Kural) - 1070
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.
பொருள்
இருப்பதை ஒளித்துக்கொண்டு `இல்லை' என்பவர்களின் சொல்லைக் கேட்டவுடன், இரப்போரின் உயிரே போய் விடுகிறதே; அப்படிச் சொல்பவர்களின் உயிர் மட்டும் எங்கே ஒளிந்துகொண்டு இருக்குமோ?.
Tamil Transliteration
Karappavarkku Yaangolikkum Kollo Irappavar
Sollaatap Poom Uyir.
மு.வரதராசனார்
இரப்பவர் இல்லை என்று சொல்கின்ற அளவிலேயே உயிர் போகின்றதே, உள்ளதை இல்லை என்று ஒளிப்பவர்க்கு உயிர் எங்கு ஒளிந்திருக்குமோ.
சாலமன் பாப்பையா
இல்லை என்று சொல்வதைக் கேட்ட உடனே பிச்சை எடுப்பவரிடமிருந்து போய் விடும் உயிர், இல்லை என்று சொல்பவர்க்கு மட்டும் போகாமல் எங்கே போய் ஒளிந்து கொள்கிறது?.
கலைஞர்
இருப்பதை ஒளித்துக்கொண்டு இல்லை என்பவர்களின் சொல்லைக் கேட்டவுடன், இரப்போரின் உயிரே போய் விடுகிறதே; அப்படிச் சொல்பவர்களின் உயிர் மட்டும் எங்கே ஒளிந்துகொண்டு இருக்குமோ?.
பரிமேலழகர்
சொல்லாட இரப்பவர் உயிர் போம் - கரப்பார் இல்லை என்று சொல்லாடிய துணையானே இரப்பார்க்கு உயிர் போகாநின்றது; கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல் - இனிச் சொல்லாடுகின்ற அவர்தமக்கு உயிர் பின்னும் நிற்றலான், அப்பொழுது எப்புரையுள் புக்கொளிந்து நிற்கும்? (உயிர் போகலாவது, 'இனி யாம் என் செய்தும்'? என்று ஏங்கிச் செயலற்று நிற்றல். 'அந்நிலையே, மாயானோ மாற்றி விடின்' (நாலடி-308) என்றார் பிறரும். 'கேட்டாரைக் கொல்லவற்றாய சொல், சொல்வாரைக் கோறல் சொல்லவேண்டாவாயினும் அது காண்கின்றிலம், இஃது என்னோ' என்பதாம். 'வறுமையுற்றுழி மறையாது இரக்கப்படுவாராய கேளிர்கட்கும் அதனைச் சொல்லாட உயிர் போம், ஆனபின், மறைக்கப்படுவாராய பிறர்க்குச் சொல்லாடியக்கால் போகாது எங்கே ஒளிந்துநிற்கும்? இரண்டானும் போமேயன்றோ'? என இரவஞ்சினான் ஒருவன் கூற்றாக்கி உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அவ்விரவின் குற்றமும் கரவின் குற்றமும் ஒருங்கு கூறப்பட்டன.)
புலியூர்க் கேசிகன்
ஒளிப்பவர் ‘இல்லை’ என்று சொன்னதுமே, இரப்பவர் உயிர் போய்விடுகின்றது; ஒளிப்பவர் உயிர் பின்னும் நிற்றலால் அது எங்கே புகுந்து ஒளிந்திருக்குமோ!
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | குடியியல் (Kudiyiyal) |
அதிகாரம் (Adhigaram) | இரவச்சம் (Iravachcham) |