குறள் (Kural) - 1069

குறள் (Kural) 1069
குறள் #1069
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.

பொருள்
இரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும் போது உள்ளம் உருகுகிறது, இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால் உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது.

Tamil Transliteration
Iravulla Ullam Urukum Karavulla
Ulladhooum Indrik Ketum.

மு.வரதராசனார்

இரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும், உள்ளதை ஒழிக்கும் கொடுமையை நினைத்தால் உருகுமளவும் இல்லாமல் அழியும்.

சாலமன் பாப்பையா

பிறரிடம் போய்ப் பிச்சை ஏற்று நிற்கும் கொடுமையை எண்ணினால் என் உள்ளம் உருகும். இக்கொடுமையைப் பார்த்த பிறகும் இல்லை என்று மறைப்பவர் கொடுமையை எண்ணினால் உருகும் உள்ளமும் இல்லாது அழிந்துவிடும்.

கலைஞர்

இரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும் போது உள்ளம் உருகுகிறது, இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால் உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது.

பரிமேலழகர்

இரவு உள்ள உள்ளம் உருகும் - உடையார் முன் இல்லார் சென்று இரந்து நிற்றலின் கொடுமையை நினைத்தால் எம் உள்ளங் கரைந்து உருகாநிற்கும்; கரவு உள்ளதூஉம் இன்றிக் கெடும் - இனி அந்நிலையைக் கண்டுவைத்தவர் இல்லை என்றலின் கொடுமையை நினைத்தால், அவ்வுருகுமளவுதானும் இன்றிப் பொன்றிவிடும்('இரவினை, உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கொலோ, கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு' (நாலடி.305)என்றார் பிறரும், இரவினும் கரவு கொடிது என்பதாம்.இதற்குப் பிறரெல்லாம் 'இரக்கின்றவர் உள்ளம் உருகும்'என்று உரைத்தார்.)

புலியூர்க் கேசிகன்

இரந்து நிற்பதன் கொடுமையை நினைத்தால், எம் உள்ளம் கரைந்து உருகும்; அவர்க்கு இல்லை என்றவர் தன்மையை நினைத்தால், அந்த உருக்கமும் காய்ந்து போகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)இரவச்சம் (Iravachcham)