குறள் (Kural) - 106

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
பொருள்
மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.
Tamil Transliteration
Maravarka Maasatraar Kenmai Thuravarka
Thunpaththul Thuppaayaar Natpu.
மு.வரதராசனார்
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.
சாலமன் பாப்பையா
உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.
கலைஞர்
மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.
பரிமேலழகர்
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு துறவற்க - துன்பக் காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை விடாதொழிக; மாசு அற்றார் கேண்மை மறவற்க - அறிவொழுக்கங்களில் குற்றமற்றாரது கேண்மையை மறவா தொழிக. (கேண்மை: கேள் ஆம் தன்மை. இம்மைக்கு உறுதி கூறுவார், மறுமைக்கு உறுதியும் உடன் கூறினார்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
துன்பத்துள் துப்பு ஆயார் நட்புத் துறவற்க-துன்பக் காலத்தில் தனக்குப் பற்றுக்கோடானவரின் நட்பை விடாதிருக்க; மாசு அற்றார் கேண்மை மறவற்க-மனத்திற் குற்றமற்றவரது உறவை மறவாதிருக்க. மாசற்றார் கேண்மை இம்மைக்கும் மறுமைக்கும் பலவகையில் உதவும் என்பது கருத்து.
மணக்குடவர்
தனக்குத் துன்பம் வந்தகாலத்து வலியாயினர் நட்பை விடாதொழிக: எக்காலத்துங் குற்றமற்றாரது நட்பை மறவாதொழிக.
புலியூர்க் கேசிகன்
மனமாசு இல்லாதவரின் நட்பினை ஒரு போதும் மறக்கலாகாது; துன்பக் காலத்தில் உறுதுணையாக உதவியவரின் நட்பையும் விடலாகாது
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | செய்ந்நன்றியறிதல் (Seynnandri Aridhal) |