குறள் (Kural) - 1061
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்.
பொருள்
இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச்சிந்தையுடைவரிடம்கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்.
Tamil Transliteration
Karavaadhu Uvandheeyum Kannannaar Kannum
Iravaamai Koti Urum.
மு.வரதராசனார்
உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும்.
சாலமன் பாப்பையா
ஒளிவு மறைவு இல்லாமல், மனம் மகிழ்ந்து பிறர்க்குக் கொடுக்கும் இயல்பு உள்ளவரிடத்திலும் ஒன்றைக் கேட்கா திருப்பது கோடி நன்மையாகும்.
கலைஞர்
இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச்சிந்தையுடைவரிடம்கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்.
பரிமேலழகர்
கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும் இரவாமை - தமக்கு உள்ளது கரவாது இவர் வரப்பெற்றேம் என்று உள்மகிழ்ந்து கொடுக்கும் கண்போலச் சிறந்தார் மாட்டும், இரவாதே ஒருவன் வறுமை கூர்தல்; கோடி உறும் - இரந்து செல்வம் எய்தலின் கோடி மடங்கு நன்று. (நலகுரவு மறைக்கப்படாத நட்டார் மாட்டும் ஆகாது என்பதுபட நின்றமையின் உம்மை உயர்வுச் சிறப்பின்கண் வந்தது. அவ்விரவான் மானம் தீராது என்னும் துணையல்லது அதற்கு மிகுதி கூடாமையின், வல்லதோர் முயற்சியான் உயிரோம்பலே நல்லது என்பது கருத்து.)
புலியூர்க் கேசிகன்
தம்மிடம் உள்ள பொருளை ஒளிக்காமல் உவப்போடு கொடுத்துதவும் கண்போன்றவரிடமும் சென்று இரந்து நிற்காமல், வறுமையைத் தாங்குதல் கோடி நன்மை தருவதாகும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | குடியியல் (Kudiyiyal) |
அதிகாரம் (Adhigaram) | இரவச்சம் (Iravachcham) |