குறள் (Kural) - 1060

குறள் (Kural) 1060
குறள் #1060
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.

பொருள்
இல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக்கூடாது தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதே.

Tamil Transliteration
Irappaan Vekulaamai Ventum Nirappitumpai
Thaaneyum Saalum Kari.

மு.வரதராசனார்

இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும், அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.

சாலமன் பாப்பையா

பிச்சை ஏற்பவன் அது கிடைக்காதபோது கோபங்கொள்ளக்கூடாது; வேண்டும்பொழுது பொருள் கிடைக்காது என்பதற்கு அவனுக்கு ஏற்பட்டுள்ள துன்பமே போதுமான சான்றாகும்.

கலைஞர்

இல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக்கூடாது. தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதே.

பரிமேலழகர்

இரப்பான் வெகுளாமை வேண்டும் - ஈவானுக்குப் பொருள் உதவாவழி இவன் எனக்கு ஈகின்றிலன் என்று அவனை இரப்பான் வெகுளாதொழிதல் வேண்டும்; நிரப்பு இடும்பை தானேயும் கரிசாலும் - அது வேண்டிய பொழுது உதவாது என்பதற்கு வேறு சான்று வேண்டா, நிரப்பாகிய தன் இடும்பை தானேயும் சான்றாதல் அமையும். (யாவர்க்கும் தேடவேண்டுதலும் நிலையின்மையும் முதலிய பிற சான்றும் உண்டு என்பதுபட நின்றமையின், உம்மை எச்ச உம்மை. தனக்கேயன்றி மற்றை யிரந்தார்க்கும் அற்றைக்கன்று பொருள் கடைக்கூட்டற்கு அவனுறும் துன்பத்தைத் தனக்கேயாக வைத்துத் தானுறுந் துன்பம் தான் அறிந்து வெகுளற்க என்பதாம். இதனான் அவர்க்கு இன்றியமையாததோர் இயல்பு கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

இரப்பவன் ஒரு போதும் தனக்குத் தராதவனை வெகுளாமல் இருக்க வேண்டும்; பொருள் வேண்டிய பொழுது வந்து உதவது என்பதற்கு அவன் வறுமையே சான்றாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)இரவு (Iravu)