குறள் (Kural) - 1047

குறள் (Kural) 1047
குறள் #1047
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.

பொருள்
வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்.

Tamil Transliteration
Aranjaaraa Nalkuravu Eendradhaa Yaanum
Piranpola Nokkap Patum.

மு.வரதராசனார்

அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.

சாலமன் பாப்பையா

நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை அந்நியனாகவே பார்ப்பாள்.

கலைஞர்

வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்.

பரிமேலழகர்

அறம் சாரா நல்குரவு - அறத்தோடு இயைபில்லாத நல்குரவு உடையான்; ஈன்ற தாயானும் பிறன் போல நோக்கப்படும் - தன்னை ஈன்ற தாயானும் பிறனைக் கருதுமாறு போலக் கருதி நோக்கப்படும். (அறத்தோடு கூடாமை - காரண காரியங்களுள் ஒன்றானும் இயையாமை. நல்குரவு - ஆகுபெயர். சிறப்பு உம்மை, அவளது இயற்கையன்புடைமை விளக்கி நின்றது. கொள்வதின்றாதலேயன்றிக் கொடுப்பது உண்டாதலும் உடைமையின், அதுநோக்கிச் சுற்றத்தார் யாவரும் துறப்பர் என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

அறத்தோடு பொருந்தாத வறுமையை உடையவன், தன்னைப் பெற்ற தாயாராலுங்கூட, ஓர் அயலானைப் போலக் கருதிப் பார்க்கப் படுவான்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)நல்குரவு (Nalkuravu)