குறள் (Kural) - 1046

குறள் (Kural) 1046
குறள் #1046
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.

பொருள்
அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்.

Tamil Transliteration
Narporul Nankunarndhu Sollinum Nalkoorndhaar
Sorporul Sorvu Patum.

மு.வரதராசனார்

நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.

சாலமன் பாப்பையா

நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.

கலைஞர்

அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்.

பரிமேலழகர்

நற்பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் - மெய்ந்நூற் பொருளைத் தெளிய அறிந்து சொன்னாராயினும்; நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும் - நல்கூர்ந்தார் சொல்லுஞ் சொல் பொருளின்மையைத் தலைப்படும். (பொருளின்மையைத் தலைப்படுதலாவது 'யாம் இவர் சொல்லியன விரும்பிக் கேட்குமாயின் கண்ணோடி இவர் உறுகின்ற குறை முடிக்க வேண்டும் என்று அஞ்சி, யாவரும் கேளாமையின், பயனில் சொல்லாய் முடிதல். கல்வியும் பயன்படாது என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

நல்லவான பொருள்களைத் தெளிவாக அறிந்து சொன்னார் ஆனாலும், வறுமைப்பட்டவர் சொல்லும் சொற்கள், பொருள் பயவாதவாய்ச் சோர்வு பட்டுவிடும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)நல்குரவு (Nalkuravu)