குறள் (Kural) - 1032

குறள் (Kural) 1032
குறள் #1032
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.

பொருள்
பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்.

Tamil Transliteration
Uzhuvaar Ulakaththaarkku Aaniaq Thaatraadhu
Ezhuvaarai Ellaam Poruththu.

மு.வரதராசனார்

உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.

சாலமன் பாப்பையா

உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல் பிற தொழிலைச் செய்யச் செல்வோர் எல்லாரையும், உழவர்களே தாங்குவதால் அவர்களே இந்த உலகத்தவர்க்கு அச்சாணி ஆவர்.

கலைஞர்

பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்.

பரிமேலழகர்

அஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து - அவ்உழுதலைச் செய்யமாட்டாது பிறதொழில்கள் மேல் செல்வார் யாவரையும் தாங்குதலால்; உழுவார் உலகத்தார்க்கு ஆணி - அது வல்லார் உலகத்தாராகிய தேர்க்கு அச்சாணியாவர். ('காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு' என்றாற்போல உழுவார் என்றது உழுவிப்பார் மேலுஞ் செல்லும். 'உலகத்தார்' என்றது ஈண்டு அவரையொழிந்தாரை. கலங்காமல் நிறுத்தற்கண் ஆணி போறலின் 'ஆணி' என்றார். 'பொறுத்தலான்' என்பது திரிந்து நின்றது. ஏகதேச உருவகம். 'அஃது ஆற்றார் தொழுவாரே எல்லாம் பொறுத்து' என்று பாடம் ஓதி, 'அது மாட்டாதார் புரப்பார் செய்யும் பரிபவமெல்லாம் பொறுத்து அவரைத் தொழுவாரேயாவர்' என்று உரைப்பாரும் உளர்.)

புலியூர்க் கேசிகன்

உழவை விட்டுப் பிற தொழில்களைச் செய்வாருக்கும் உணவுப் பொருள்களைத் தந்து தாங்குவதனால், உழுதொழில் செய்வாரே உலகத்தாருக்கு அச்சாணி ஆவார்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)உழவு (Uzhavu)