குறள் (Kural) - 1033

குறள் (Kural) 1033
குறள் #1033
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

பொருள்
உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.

Tamil Transliteration
Uzhudhuntu Vaazhvaare Vaazhvaarmar Rellaam
Thozhudhuntu Pinsel Pavar.

மு.வரதராசனார்

உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

சாலமன் பாப்பையா

பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.

கலைஞர்

உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.

பரிமேலழகர்

உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் - யாவரும் உண்ணும் வகை உழுதலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்கின்றாரே, தமக்குரியராய் வாழ்கின்றவர்; மற்றெல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர் - மற்றையாரெல்லாம் பிறரைத் தொழுது, அதனால் தாம் உண்டு அவரைப் பின்செல்கின்றவர். ['மற்று' என்பது வழக்குப்பற்றி வந்தது. தாமும் மக்கட்பிறப்பினராய் வைத்துப் பிறரைத் தொழுது அவர் சில கொடுப்பத் தம் உயிரோம்பி அவர் பின் செல்வார் தமக்குரியரல்லர் என்பது கருத்து.)

புலியூர்க் கேசிகன்

யாவரும் உண்ணுவதற்கு உணவைத் தந்து, தாமும் உண்டு வாழ்பவரே உரிமை வாழ்வினர்; மற்றையவர் பிறரைத் தொழுது உண்டு, அவர் பின் செல்கின்றவரே யாவர்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)உழவு (Uzhavu)