குறள் (Kural) - 1031
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
பொருள்
பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.
Tamil Transliteration
Suzhandrumerp Pinnadhu Ulakam Adhanaal
Uzhandhum Uzhave Thalai.
மு.வரதராசனார்
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.
சாலமன் பாப்பையா
உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது.
கலைஞர்
பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.
பரிமேலழகர்
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் - உழுதலான் வரும் மெய் வருத்தம் நோக்கிப் பிறதொழில்களைச் செய்து திரிந்தும், முடிவில் ஏர் உடையார் வழியதாயிற்று உலகம்; அதனால் உழந்தும் உழவே தலை - ஆதலான் எலலா வருத்தம் உற்றும், தலையாய தொழில் உழவே. (ஏர் - ஆகுபெயர். பிற தொழில்களால் பொருளெய்திய வழியும், உணவின் பொருட்டு உழுவார்கண் செல்ல வேண்டுதலின், 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்றும், வருத்தமிலவேனும் பிற தொழில்கள் கடை என்பது போதர, 'உழந்தும் உழவே தலை' என்றும் கூறினார். இதனால் உழவினது சிறப்புக் கூறப்பட்டது.)
புலியூர்க் கேசிகன்
உழவின் வருத்தத்தைக் கண்டு, பிற தொழில்களைச் செய்து திரிந்தாலும், முடிவில் ஏருடையவரையே உலகம் உணவுக்கு எதிர்பார்த்தலால், உழவே மிகவும் சிறந்தது
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | குடியியல் (Kudiyiyal) |
அதிகாரம் (Adhigaram) | உழவு (Uzhavu) |