குறள் (Kural) - 103
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
பொருள்
என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.
Tamil Transliteration
Payandhookkaar Seydha Udhavi Nayandhookkin
Nanmai Katalin Peridhu.
மு.வரதராசனார்
இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்.
சாலமன் பாப்பையா
இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.
கலைஞர்
என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.
பரிமேலழகர்
பயன்தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் - இவர்க்கு இது செய்தால் இன்னது பயக்கும் என்று ஆராய்தல் இலராய்ச் செய்த உதவியாகிய ஈரமுடைமையை ஆராயின்; நன்மை கடலின் பெரிது - அதன் நன்மை கடலினும் பெரிது ஆம். (இவை மூன்று பாட்டானும் முறையே காரணம் இன்றிச் செய்ததூஉம், காலத்தினால் செய்ததூஉம், பயன் தூக்காராய்ச் செய்ததூஉம் அளவிலவாதல் கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
பயன் தூக்கார் செய்த வுதவி நயன் தூக்கின்- இவருக்கு இன்னது செய்தால் நமக்கு இன்னது கிடைக்குமென்று ஆராயாது ஒருவர் செய்த வுதவியின் அருமையை ஆய்ந்து நோக்கின்; நன்மை கடலின் பெரிது- அதன் நன்மை கடலினும் பெரியதாம். காலத்தினாற் செய்த நன்றி பயன்தூக்கியதாகவு மிருக்கலா மாதலால், பயன் தூக்காது செய்த வுதவியும் ஒருவகையிற் பெரியதே யென்றார்.
மணக்குடவர்
தமக்கொரு பயனை நோக்காதவராய்ச் செய்த வுபகாரத்தாலுண்டாய நன்மையை யாராயின், அதனா லுண்டாய நன்மை கடலினும் பெரிது.
புலியூர்க் கேசிகன்
பயனைக் கருதாதவர் செய்த உதவியின் நன்மையினை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலையும் விட அளவினால் மிகப் பெரியதாகும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | செய்ந்நன்றியறிதல் (Seynnandri Aridhal) |