குறள் (Kural) - 102

குறள் (Kural) 102
குறள் #102
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

பொருள்
தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.

Tamil Transliteration
Kaalaththi Naarseydha Nandri Siridheninum
Gnaalaththin Maanap Peridhu.

மு.வரதராசனார்

உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.

சாலமன் பாப்பையா

நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்.

கலைஞர்

தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.

பரிமேலழகர்

காலத்தினால் செய்த நன்றி - ஒருவனுக்கு இறுதிவந்த எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம்; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப்பெரிது - தன்னை நோக்கச் சிறிதாயிருந்தது ஆயினும் அக்காலத்தை நோக்க நிலவுலகத்தினும் மிகப் பெரியது. (அக்காலம் நோக்குவதல்லது பொருள் நோக்கலாகாது என்பதாம். 'காலத்தினால்' என்பது வேற்றுமை மயக்கம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

காலத்தினால் செய்த நன்றி- ஒருவனது வாழ்க்கைக்கேனும் தொழிற்கேனும் இறுதி நேரும் நெருக்கடி வேளையில் அதை நீக்க இன்னொருவன் செய்த வுதவி; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது- பொருளளவிலும் முயற்சியளவிலும் சிறிதாயிருந்தாலும், அக்கால நிலைநோக்க நிலவுலகத்தினும் பெரிதாம். ஒருவர் செய்த நன்றியை அது செய்யப்பட்ட காலநிலைக்கேற்ப மதிக்க வேண்டுமென்பது கருத்து. 'காலத்தினால்' என்பது காலத்தாலே வந்தான் என்னும், மேலைவடார்க்காட்டு வழக்குப் போன்ற வேற்றுமை மயக்கம்.

மணக்குடவர்

உதவவேண்டுங்காலந் தப்பாமற் செய்தவுதவி தான்சிறிதாயிருந்ததாயினும், உலகத்தினும் மிகப் பெரிது. இது காலந் தப்பாமற் செய்த வுதவி உலகத்தினும் பெரிதென்றது.

புலியூர்க் கேசிகன்

காலத்தோடு செய்த உதவியானது அளவால் சிறிதே என்றாலும், அதன் பெருமையோ உலகத்தை விடப் பெரியதாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)செய்ந்நன்றியறிதல் (Seynnandri Aridhal)