குறள் (Kural) - 104

குறள் (Kural) 104
குறள் #104
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

பொருள்
ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்.

Tamil Transliteration
Thinaiththunai Nandri Seyinum Panaiththunaiyaak
Kolvar Payandheri Vaar.

மு.வரதராசனார்

ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

சாலமன் பாப்பையா

தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்.

கலைஞர்

ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்.

பரிமேலழகர்

தினைத்துணை நன்றி செயினும் - தமக்குத் தினையளவிற்றாய உபகாரத்தை ஒருவன் செய்தானாயினும்; பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார் - அதனை அவ்வளவிற்றாகக் கருதாது, பனையளவிற்றாகக் கருதுவர் அக்கருத்தின் பயன் தெரிவார். ('தினை', 'பனை' என்பன சிறுமை பெருமைகட்குக் காட்டுவன சில அளவை. அக்கருத்தின் பயனாவது அங்ஙனம் கருதுவார்க்கு வரும் பயன்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

தினைத்துணை நன்றி செயினும்- தினையளவினதாகிய சிற்றுதவியையே ஒருவன் தமக்குச் செய்தானாயினும்; பயன் தெரிவார் பனைத் துணையாக் கொள்வர்- அதன் பயனளவை யறிந்தவர் அதைப் பனையளவினதாகிய பேருதவியாகக் கருதுவர். 'தினை' 'பனை' என்னும் நிலைத்திணைப் பெயர்கள் இங்குச் சிறுமை பெருமை குறிக்கும் அளவைப் பெயர்களாக வந்தன, 'உம்மை' இழிவு சிறப்பு. ஒருவர் செய்த வுதவியைப் பொருளளவிலும் முயற்சியளவிலும் நோக்காது பயனளவில் நோக்க வேண்டு மென்பது, இங்குக் கூறப்பட்டது.

மணக்குடவர்

தினையளவு நன்றி செய்தாராயினும், அதனை யவ்வளவிற்றென்று நினையாது, பனையளவாகக் கொள்வார் அதன் பயனை யறிபவர். பனையளவு- அதனுயர்ச்சி

புலியூர்க் கேசிகன்

உதவியின் பயனைத் தெரிந்தவர்கள், தினையளவே ஒருவன் நன்மை செய்தாலும், அதனைப் பனையளவாக உளங் கொண்டு போற்றுவார்கள்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)செய்ந்நன்றியறிதல் (Seynnandri Aridhal)