குறள் (Kural) - 1004
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.
பொருள்
யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?.
Tamil Transliteration
Echchamendru Enennung Kollo Oruvaraal
Nachchap Pataaa Thavan.
மு.வரதராசனார்
பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.
சாலமன் பாப்பையா
பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்?.
கலைஞர்
யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?.
பரிமேலழகர்
ஒருவரான் நச்சப்படாதவன் - ஒரு பொருளும் ஈந்தறியாமையின் ஒருவராலும் நச்சப்படுதல் இல்லாதவன்; எச்சம் என்று என் எண்ணுங்கொல் - தான் இறந்தவழி ஈண்டு ஒழிந்து நிற்பதாக யாதனைக் கருதுமோ?(ஈண்டு ஒழிந்து நிற்கும் புகழ் ஈவான் மேலன்றி நில்லாமையின்,அவனுக்கு அதனோடு யாதும் இயைபு இல்லைஎன்பார், 'என் எண்ணுங்கொல்லோ' என்றார். ஓகாரம் - அசை. இவைமூன்று பாட்டானும் பிறர்க்குப் பயன்படலின்மை கூறப்பட்டது.)
புலியூர்க் கேசிகன்
ஒரு பொருளும் கொடுத்தறியாததால் எவராலும் விரும்பி வரப்படாதவன், தான் இறந்ததன் பின்னர், இவ்வுலகிலே எஞ்சி நிற்பதற்கென்று எதை நினைப்பானோ?
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | குடியியல் (Kudiyiyal) |
அதிகாரம் (Adhigaram) | நன்றியில் செல்வம் (Nandriyilselvam) |