குறள் (Kural) - 1005

குறள் (Kural) 1005
குறள் #1005
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.

பொருள்
கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை.

Tamil Transliteration
Kotuppadhooum Thuyppadhooum Illaarkku Atukkiya
Kotiyun Taayinum Il.

மு.வரதராசனார்

பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.

சாலமன் பாப்பையா

தேவைப்படுவோர்க்குக் கொடுப்பதும், தேவை கண்டு தாம் அனுபவிப்பதும் இல்லாதவர்க்குப்பல மடங்காக அடுக்கிய கோடிப் பொருள் இருந்தாலும் இல்லாததே ஆகும்.

கலைஞர்

கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை.

பரிமேலழகர்

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு - பிறர்க்கு ஈவதும் தாம் நுகர்வதுமாய இரண்டு செய்கையும் உடையரல்லாதார்க்கு; அடுக்கிய கோடி உண்டாயினும் இல் - பலவாக அடுக்கிய கோடிப் பொருளுண்டாயினும் ஒன்றும் இல்லை. (இன்பத்தினும் அறம் சிறந்தமையின்,கொடுத்தல் தொழில் முற்கூறப்பட்டது. 'அடுக்கிய கோடி' என்றது ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. ஒன்றுமில்லார் போலப் பயனிரண்டும் இழத்தலின், 'இல்' என்றார்.)

புலியூர்க் கேசிகன்

இரப்போருக்குக் கொடுப்பதும், தாம் நுகர்வதுமாகிய செல்வத்தின் பயனை இழந்தவர்களுக்குக் கோடி கோடியான செல்வம் இருந்தாலும், அதனால் யாதும் பயன் இல்லை

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)நன்றியில் செல்வம் (Nandriyilselvam)