குறள் (Kural) - 1003

குறள் (Kural) 1003
குறள் #1003
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.

பொருள்
புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாக இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும்.

Tamil Transliteration
Eettam Ivari Isaiventaa Aatavar
Thotram Nilakkup Porai.

மு.வரதராசனார்

சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்கு பாரமே ஆகும்.

சாலமன் பாப்பையா

மற்றவரைவிட நாம் அதிகம் பொருள் சேர்க்க வேண்டும் என்று பொருள் சேர்ப்பதையே விரும்பிப் புகழை விரும்பாத மனிதரின் பிறப்பு இப்பூமிக்குப் பாரமே.

கலைஞர்

புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாக இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும்.

பரிமேலழகர்

ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர் தோற்றம் - யாம் பிறரின் மிக ஈட்டுதும் என்று பொருளினது ஈட்டல் மாத்திரத்தையே விரும்பி, அதன் பயனாய புகழை விரும்பாத மக்களது பிறப்பு; நிலக்குப் பொறை - நிலத்திற்குப் பாரமாம் அத்துணையே. (இசை, இருமைக்கும் உறுதியாய அறமாகலின், ஈகையான் அதனையே வேண்டல் செய்யாது ஈட்டல் துன்பத்தையும், காத்தல் துன்பத்தையும் வேண்டிய அறிவின்மைபற்றி, 'நிலக்குப் பொறை' என்றார். பிறப்பு என்றது அதற்கு உரிய உடம்பினை.)'

புலியூர்க் கேசிகன்

மேன்மேலும் பொருளைத் தேடுவதையே விரும்பி, அதன் பயனாக வரும் புகழை விரும்பாத மக்கட் பிறவியானது, இப் பூமிக்கு ஒரு சுமையே அல்லாமல் வேறில்லை

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)நன்றியில் செல்வம் (Nandriyilselvam)