குறள் (Kural) - 982

குறள் (Kural) 982
குறள் #982
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.

பொருள்
நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும் வேறு எந்த அழகும் அழகல்ல.

Tamil Transliteration
Kunanalam Saandror Nalane Piranalam
Ennalaththu Ulladhooum Andru.

மு.வரதராசனார்

சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.

சாலமன் பாப்பையா

சான்றோர் என்பவர்க்கு அழகு, குறங்களால் ஆகிய அழகே; பிற புற அழகெல்லாம் எந்த அழகிலும் சேரா.

கலைஞர்

நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும். வேறு எந்த அழகும் அழகல்ல.

பரிமேலழகர்

சான்றோர் நலன் குணநலமே - சான்றோர் நலமாவது குணங்களானாய நலமே; பிற நலம் எந்நலத்தும் உள்ளது அன்று - அஃது ஒழிந்த உறுப்புக்களானாய நலம் ஒரு நலத்தினும் உள்ளதன்று. (அகநலத்தை முன்னே பிரித்தமையின், ஏனைப் புறநலத்தைப் 'பிற நலம்' என்றும், அது குடிப் பிறப்பும் கல்வியும் முதலாக நூலோர் எடுத்த நலங்களுள் புகுதாமையின்,எந்நலத்துள்ளதூஉம் அன்று என்றும் கூறினார். இவைஇரண்டு பாட்டானும் சால்பிற்கு ஏற்ற குணங்கள்பொதுவகையான் கூறப்பட்டன.)

புலியூர்க் கேசிகன்

சான்றோர்களின் சிறப்பாவது, அவர் குணநலங்களால் வந்த சிறப்பே; அ·து ஒழிந்த பிற நலன்கள் எல்லாம், எந்நலத்தினும் சேர்வதான ஒரு நலனே ஆகாது

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)சான்றாண்மை (Saandraanmai)