குறள் (Kural) - 981

குறள் (Kural) 981
குறள் #981
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

பொருள்
ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும்.

Tamil Transliteration
Katanenpa Nallavai Ellaam Katanarindhu
Saandraanmai Merkol Pavarkku.

மு.வரதராசனார்

கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா

நாம் செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர்.

கலைஞர்

ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும்.

பரிமேலழகர்

கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு - நமக்குத் தகுவது இது என்று அறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு; நல்லவை எல்லாம் கடன் என்ப - நல்லனவாய குணங்கள் எல்லாம் இயல்பாயிருக்கும் என்று சொல்லுவர் நூலோர். (சில குணங்கள் இலவாயவழியும், உள்ளன செய்துகொண்டனவாய வழியும் சான்றாண்மை என்னும் சொற்பொருள் கூடாமையின், நூலோர் இவ்வேதுப் பெயர் பற்றி அவர் இலக்கணம் இவ்வாறு கூறுவர் என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

‘நமக்கு இது தகுவது’ என்று அறிந்து, சான்றாண்மை மேற்கொண்டு ஒழுகுபவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் அவருடைய இயல்பாகவேயிருக்கும் என்பார்கள்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)சான்றாண்மை (Saandraanmai)