குறள் (Kural) - 98

குறள் (Kural) 98
குறள் #98
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.

பொருள்
சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.

Tamil Transliteration
Sirumaiyul Neengiya Insol Marumaiyum
Immaiyum Inpam Tharum.

மு.வரதராசனார்

பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.

சாலமன் பாப்பையா

பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.

கலைஞர்

சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.

பரிமேலழகர்

சிறுமையுள் நீங்கிய இன்சொல் - பொருளால் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல்; மறுமையும் இம்மையும் இன்பம் தரும் - ஒருவனுக்கு இருமையினும் இன்பத்தைப் பயக்கும். (மறுமை இன்பம் பெரிதாகலின், முன் கூறப்பட்டது. இம்மை இன்பமாவது, உலகம் தன் வயத்ததாகலான் நல்லன எய்தி இன்புறுதல். இவை இரண்டு பாட்டானும் இருமைப்பயனும் ஒருங்கு எய்துதல் வலியுறுத்தப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

சிறுமையுள் நீங்கிய இன்சொல் - விளைவாலும் பொருளாலும் குரலாலும் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல் ; இம்மையும் மறுமையும் இன்பம் தரும் - ஒருவனுக்கு இருமையிலும் இன்பம் விளைவிக்கும் . இம்மை இன்பமாவது ஐம்புல நுகர்ச்சி பெற்று நோயற்ற நீடு வாழ்வு . மறுமையின்பமாவது விண்ணுலக வாழ்வு அல்லது மண்ணுலக நற்பதவி . இன்சொல் என்பது இன்செயலையுந் தழுவும் .

மணக்குடவர்

புன்மையுள் நின்று நீங்கிய இனிய சொற்கள் இம்மையின் கண்ணும் மறுமையின் கண்ணும் இன்பத்தைத் தரும்.

புலியூர்க் கேசிகன்

சிறுமையான எண்ணங்களில்லாத இனிய சொற்கள், மறுமையிலும் இம்மையிலும் ஒருவனுக்கு இன்பத்தைத் தரும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)இனியவை கூறல் (Iniyavaikooral)