குறள் (Kural) - 97

குறள் (Kural) 97
குறள் #97
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

பொருள்
நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்.

Tamil Transliteration
Nayan Eendru Nandri Payakkum Payaneendru
Panpin Thalaippiriyaach Chol.

மு.வரதராசனார்

பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.

சாலமன் பாப்பையா

பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்.

கலைஞர்

நன்மையான
பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக்
கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்.

பரிமேலழகர்

நயன் ஈன்று நன்றி பயக்கும் - ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்: பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் - பொருளால் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல். (நீதி: உலகத்தோடு பொருந்துதல். 'பண்பு' என்பது ஈண்டு அதிகாரத்தான் இனிமைமேல் நின்றது. தலைப்பிரிதல் - ஒரு சொல் நீர்மைத்து.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் - விளைவாற் பிறர்க்கு நன்மை செய்து இனிமைப் பண்பினின்றும் நீங்காத சொல் ; நயன் ஈன்று நன்றி பயக்கும் - இம்மைக்கு நேர்ப்பாட்டை ( நீதியை ) உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் விளைவிக்கும் . நேர்பாடு என்பது நீதி என்னும் வடசொற்கு நேர்த்தென்சொல் . நேர்மை என்பது நேர்பாட்டையுங் குறிக்கும் பல பொருளொரு சொல் . நேர்பாடு நேர்மையான ஒழுக்கம் . " கோணே நேர்பாடாயிருந்தான் " ( பாரத . சூது .227 ) . ' பண்பு ' என்பது இங்கு அதிகாரத்தால் இனிமைப் பண்பைக் குறித்தது . தலைப்பிரிதல் என்பது தலைக்கூடுதல் என்பதற்கு எதிர் .

மணக்குடவர்

பிறரால் விரும்பப்படுதலையும் பயந்து, பொருளையும் பயந்து, அறத்தினையும் பயக்கும்; குணத்தினின்று நீங்காத சொல்.

புலியூர்க் கேசிகன்

பிறர்க்கு நல்ல பயனைத் தந்து, நல்ல பண்பிலிருந்து ஒரு சிறிதும் விலகாத சொற்கள், சொல்வானுக்கும், நன்மை தந்து உபகாரம் செய்யும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)இனியவை கூறல் (Iniyavaikooral)