குறள் (Kural) - 99

குறள் (Kural) 99
குறள் #99
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

பொருள்
இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?.

Tamil Transliteration
Insol Inidheendral Kaanpaan Evankolo
Vansol Vazhangu Vadhu?.

மு.வரதராசனார்

இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?.

சாலமன் பாப்பையா

பிறர்
சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும்
துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?.

கலைஞர்

இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?.

பரிமேலழகர்

இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் - பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் பயத்தலை அனுபவித்து அறிகின்றவன்; வன்சொல் வழங்குவது எவன்கொல் - அது நிற்கப் பிறர்மாட்டு வன்சொல்லைச் சொல்வது என்ன பயன் கருதி? ('இனிது' என்றது வினைக்குறிப்புப் பெயர். கடுஞ்சொல் பிறர்க்கும் இன்னாதாகலின், அது கூறலாகாது என்பது கருத்து.)

ஞா.தேவநேயப் பாவாணர்

இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் - பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பந் தருதலை நுகர்ந்தறிகின்றவன் ; வன்சொல் வழங்குவது எவனோ - தான் மட்டும் பிறரிடத்தில் வன் சொல்லை ஆள்வது என்ன பயன்கருதியோ ! ' கொல் ' அசைநிலை . ' ஒ ' இரக்கப் பொருளது . " தன்னுயிர் போல் மன்னுயிரை நினைக்க வேண்டும் . " என்பது , இங்கு வற்புறுத்தப் பட்டது .

மணக்குடவர்

இருவர் மாறுபடச் சொன்ன மாற்றத்தினது உண்மைப் பொருளைக் கண்டார் கூறும் மெய்யாகிய சொற்களும் இன்சொலாதலானே அருளொடு பொருந்திக் குற்றமிலவாம். இஃது ஒருவனைக் கடிந்து சொல்லவேண்டு மிடத்தும் இன்சொல்லாலே கடிய வேண்டுமென்றது.

புலியூர்க் கேசிகன்

இனிய சொற்கள் தனக்கு மிகுந்த இன்பத்தைத் தருவதனைக் காண்பவன், வன்சொற்களை வழங்குவது எந்தக் காரணத்தாலோ?

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)இனியவை கூறல் (Iniyavaikooral)