குறள் (Kural) - 979

குறள் (Kural) 979
குறள் #979
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.

பொருள்
ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும் ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்.

Tamil Transliteration
Perumai Perumidham Inmai Sirumai
Perumidham Oorndhu Vital.

மு.வரதராசனார்

பெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல், சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்.

சாலமன் பாப்பையா

பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லா‌மலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை.

கலைஞர்

ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும். ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்.

பரிமேலழகர்

பெருமை பெருமிதம் இன்மை - பெருமைக்குணமாவது காரணமுண்டாய வழியும் அஃது இயல்பாதல் நோக்கித் தருக்கின்றியிருத்தல்; சிறுமை பெருமிதம் ஊர்ந்துவிடல் - சிறுமைக் குணமாவது அஃது இல்வழியும் அதனை ஏற்றுக்கொண்டு தருக்கின் முடிவின்கண்ணே நின்றுவிடுதல். ('அளவறத் தருக்குதல்' என்பதாயிற்று. 'விடும்' என்று பாடம் ஓதுவாரும் உளர், முற்றுத்தொடரும் எழுவாய்த் தொடரும் தம்முள் இயையாமையின், அது பாடமன்மை உணர்க.)

புலியூர்க் கேசிகன்

பெருமை குணம் ஆவது, காரணம் உள்ள போதும் தருக்கின்றி அமைந்திருத்தல்; சிறுமைக்குணமாவது பெருமை அற்ற போதும் தருக்கி, முடிவில் நின்றுவிடலாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)பெருமை (Perumai)