குறள் (Kural) - 978

குறள் (Kural) 978
குறள் #978
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

பொருள்
பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்.

Tamil Transliteration
Paniyumaam Endrum Perumai Sirumai
Aniyumaam Thannai Viyandhu.

மு.வரதராசனார்

பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.

சாலமன் பாப்பையா

பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.

கலைஞர்

பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்.

பரிமேலழகர்

பெருமை என்றும் பணியும் - பெருமையுடையார் அச்சிறப்பு உண்டாய ஞான்றும் தருக்கின்றி அமைந்தொழுகுவர்; சிறுமை (என்றும்) தன்னை வியந்து அணியும் - மற்றைச் சிறுமையுடையார் அஃதில்லாத ஞான்றும் தம்மை வியந்து புனையா நிற்பர். (பொருளின் தொழில்கள் பண்பின்மேல் ஏற்றப்பட்டன. இஃது 'அற்றம் மறைக்கும் பெருமை'(குறள் 980) என்புழியும் ஒக்கும். 'என்றும்' என்பது பின்னும் வந்து இயைந்தது. ஆம் என்பன இரண்டும் அசை. புனைதல் - பிறரின் தமக்கு ஓர் மிகுதியை ஏற்றுக்கோடல். இதற்கு, 'உயர்ந்தார் தாழ்வார்; தாழ்ந்தார் உயர்வார், இஃதொரு விரோதம் இருந்தவாறு என்?' என உலகியலை வியந்து கூறிற்று ஆக்குவாரும் உளர்.)

புலியூர்க் கேசிகன்

பெருமை உடையவர் தருக்கியிராமல் பணிவாகவே நடந்து வருவார்கள்; மற்றைச் சிறுமை உடையவரோ எப்போது தம்மை வியந்து புனைந்து பேசி வருவார்கள்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)பெருமை (Perumai)