குறள் (Kural) - 976
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு.
பொருள்
பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை.
Tamil Transliteration
Siriyaar Unarchchiyul Illai Periyaaraip
Penikkol Vemennum Nokku.
மு.வரதராசனார்
பெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.
சாலமன் பாப்பையா
பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது.
கலைஞர்
பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை.
பரிமேலழகர்
பெரியாரைப் பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு - அப்பெற்றியராய பெரியாரை வழிபட்டு அவர் இயல்பினை யாம் கோடும் என்னும் கருத்து; சிறியார் உணர்ச்சியுள் இல்லை - மற்றைச் சிறியராயினார் மனத்தின்கண் உளதாகாது. (குடிமை, செல்வம், கல்வி என்று இவற்றது உண்மை மாத்திரத்தால் தம்மை வியந்திருப்பார்க்கு, அவை தமக்கு இயல்பு என்று அமைந்திருப்பாரை வழிபட்டு, அஃது உடையராதல் கூடாது என்பதாம்.)
புலியூர்க் கேசிகன்
‘இத்தகையவரான பெரியோரை வழிபட்டு அவரியல்பை நாமும் அடைவோம்’ என்னும் நல்ல நோக்கம், மற்றைச் சிறியார் மனத்தில் ஒரு போதும் உண்டாகாது
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | குடியியல் (Kudiyiyal) |
அதிகாரம் (Adhigaram) | பெருமை (Perumai) |