குறள் (Kural) - 975
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.
பொருள்
அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்.
Tamil Transliteration
Perumai Yutaiyavar Aatruvaar Aatrin
Arumai Utaiya Seyal.
மு.வரதராசனார்
பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.
சாலமன் பாப்பையா
எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்.
கலைஞர்
அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்.
பரிமேலழகர்
பெருமை உடையவர் - அவ்வாற்றால் பெருமையுடையராயினார்; அருமை உடைய செயல் ஆற்றின் ஆற்றுவார் - தாம் வறியராய வழியும் பிறரால் செய்தற்கு அரியவாய தம் செயல்களை விடாது அவை செய்யும் நெறியால் கடைபோகச் செய்தலை வல்லராவர். ('வறியராய வழியும்' என்பது முன் செய்து போந்தமை தோன்றப் 'பெருமை உடையவர்' என்றதனானும், 'ஆற்றுவார்' என்றதனானும் பெற்றாம். இதனால் அதனை உடையார் செய்தி கூறப்பட்டது.)
புலியூர்க் கேசிகன்
பெருமை உடையவர்கள், தாம் வறுமையான போதும், பிறரால் செய்வதற்கு அருமையான தம் செயல்களை விடாமல் செய்து முடிக்கும் வலிமை கொண்டவராவர்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | குடியியல் (Kudiyiyal) |
அதிகாரம் (Adhigaram) | பெருமை (Perumai) |