குறள் (Kural) - 96

குறள் (Kural) 96
குறள் #96
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.

பொருள்
தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.

Tamil Transliteration
Allavai Theya Aramperukum Nallavai
Naati Iniya Solin.

மு.வரதராசனார்

பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.

சாலமன் பாப்பையா

பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.

கலைஞர்

தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.

பரிமேலழகர்

நல்லவை நாடி இனிய சொலின் - பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமாயின்; அல்லவை தேய அறம் பெருகும் - அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும். (தேய்தல் : தன் பகை ஆகிய அறம் வளர்தலின் தனக்கு நிலையின்றி மெலிதல். "தவத்தின்முன் நில்லாதாம் பாவம்" (நாலடி.51) என்பதூஉம் இப்பொருட்டு. நல்லவை நாடிச் சொல்லுங்காலும் கடியவாகச் சொல்லின், அறன் ஆகாது என்பதாம். இதனான் மறுமைப்பயன் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

நல்லவை நாடி இனிய சொலின் - விளைவாற் பிறர்க்கு நன்மை பயக்குஞ் சொற்களை ஆராய்ந்தறிந்து அவற்றைச் செவிக்கினிதாக ஒருவன் சொல்வானாயின் ; அல்லவை தேய அறம் பெருகும் - அவனுக்குத் தீவினைப் பயன் குன்ற நல்வினைப் பயன் வளரும் . அறம் நல்வினை ; இங்கு அதன் பயனைக் குறித்தது . அறமல்லாதவை தீவினைகள் . தீவினைகள் தேய்தலாவது தீவினைப் பயன் குன்றல் . நல்வினையும் தீவினையும் ஒளியும் இருளும் போல மறுதலைப் பொருள்களாதலின் , ஒளியின் முன் இருள் கெடுதல் போல நல்வினைப் பயன் முன் தீவினைப் பயன் கெடுமென்றார் . நல்லவற்றைச் சொன்னாலும் அறமாகுமேனும் , அவற்றைக் கடுமையாகச் சொல்லின் கேட்பார் மனம் வருந்தி அவ்வறங் கெடுதலால் , நல்லவற்றையும் இனிதாகச் சொன்னாலன்றி அறமாகாதென்றார் . இதனால் இன்சொல்லின் அறத்தன்மை வலியுறுத்தப் பெற்றது .

மணக்குடவர்

நல்லவான சொற்களை யாராய்ந்து இனியவாகச் சொல்லுவானாயின் அதனானே அறமல்லாதன தேய அறம் வளரும்.

புலியூர்க் கேசிகன்

நன்மையானவைகளையே விரும்பி, இனிய சொற்களையும், சொல்லி வந்தால், அதனால் பாவங்கள் தேய்ந்து போக, அறம் வளர்ந்து பெருகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)இனியவை கூறல் (Iniyavaikooral)