குறள் (Kural) - 965

குறள் (Kural) 965
குறள் #965
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.

பொருள்
குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்.

Tamil Transliteration
Kundrin Anaiyaarum Kundruvar Kundruva
Kundri Anaiya Seyin.

மு.வரதராசனார்

மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.

சாலமன் பாப்பையா

நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்.

கலைஞர்

குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈ.டுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்.

பரிமேலழகர்

குன்றின் அனையாரும் - குடிப்பிறப்பான் மலைபோல உயர்ந்தோரும்; குன்றுவ குன்றி அனைய செயின் குன்றுவர் - தாழ்தற்கு ஏதுவாகிய செயல்களை ஒரு குன்றி அளவாயினும் செய்வராயின் தாழ்வர். ('குன்றியனையவும்' என்னும் இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தாழ்தற்கு ஏதுவாய செயல்களாவன, இளிவந்தன. சொற்பின் வருநிலை.)

புலியூர்க் கேசிகன்

குடிப்பிறப்பாலே குன்று போல உயர்ந்த பெருமையை அடைந்தவர்களும், குன்றியளவு தகுதியற்ற செயல்களைச் செய்தாரானால் தாழ்ச்சி அடைவார்கள்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)மானம் (Maanam)