குறள் (Kural) - 964

குறள் (Kural) 964
குறள் #964
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.

பொருள்
மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார்.

Tamil Transliteration
Thalaiyin Izhindha Mayiranaiyar Maandhar
Nilaiyin Izhindhak Katai.

மு.வரதராசனார்

மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.

சாலமன் பாப்பையா

நல்ல குடும்பத்தில் பிறந்தவர் மானம் காக்காமல் தம் உயர்ந்த நிலையை விட்டுவிட்டுத் தாழ்ந்தால், தலையை விட்டு விழுந்த மயிரைப் போன்றவர் ஆவார்.

கலைஞர்

மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார்.

பரிமேலழகர்

மாந்தர் - குடிப்பிறந்த மாந்தர்; நிலையின் இழிந்தக்கடை - தம் உயர்ந்த நிலையைவிட்டு அதனின்றும் தாழ்ந்த வழி; தலையின் இழிந்த மயிர் அனையர் - தலையை விட்டு அதனினின்றும் வீழ்ந்த மயிரினை ஒப்பர், {அந்நிலையை விடாது நின்ற வழிப் பேணப்படுதலும,் விட்டுத் தாழ்ந்த வழி இழிக்கப்படுதலும் உவமையாற் பெற்றாம்.)

புலியூர்க் கேசிகன்

நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் உயர்வான நிலையை விட்டுத் தாழ்ந்த விடத்து, தலையைவிட்டு அகன்று விழுந்த மயிரைப் போல இழிவு அடைவார்கள்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)மானம் (Maanam)