குறள் (Kural) - 95
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
பொருள்
அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.
Tamil Transliteration
Panivutaiyan Insolan Aadhal Oruvarku
Aniyalla Matrup Pira.
மு.வரதராசனார்
வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.
சாலமன் பாப்பையா
தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா.
கலைஞர்
அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.
பரிமேலழகர்
ஒருவற்கு அணி பணிவு உடையன் இன்சொலன் ஆதல் - ஒருவனுக்கு அணியாவது தன்னால் தாழப்படுவார்கண் தாழ்ச்சியுடையனாய் எல்லார் கண்ணும் இனிய சொல்லையும் உடையனாதல், பிற அல்ல - அன்றி மெய்க்கு அணியும் பிற அணிகள் அணி ஆகா. (இன்சொலனாதற்கு இனமாகலின், பணிவுடைமையும் உடன் கூறினார். 'மற்று' அசை நிலை. வேற்றுமை உடைமையான், பிற எனவும், இவைபோலப் பேரழகு செய்யாமையின் 'அல்ல' எனவும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் இனியவை கூறுவார்க்கு இம்மைப் பயன் கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
ஒருவற்கு அணி பணிவு உடையன் இன்சொலன் ஆதல் - ஒருவனுக்கு அணியாவன அடக்கமுடைமையும் இன்சொலுடைமையுமாம் ; பிற அல்ல - மற்ற பொன்னாலும் மணியாலும் செய்யப்பட்ட அணிகள் அணிகளாகா. பணிவுடைமை இன்முகத்தோடு கூடியதாகலின் இன்சொற்கு உடன் சேர்த்துக் கூறப்படும் இனமாயிற்று . பண்டைக்காலத்தில் ஆடவரும் காதிலும் கழுத்திலும் கையிலும் அணியணிவது பெருவழக்கமாதலின் , 'ஒருவற்கு' என ஆண்பாலாற் குறித்தது தலைமை பற்றியதாகும். அடக்கமுடைமையும் இன்சொலுடைமையும் இருபாற்கும் ஒப்பப் பொதுவேனும் , அணியுடைமை பெண்பாற்குப் போல் ஆண்பாற்குத் தேவையன்று என்பது குறிப்பான் அறியப்படும்.'மற்று' அசைநிலை.
மணக்குடவர்
ஒருவனுக்கு அழகாவது தாழ்ச்சி யுடையனா யினிய சொற்களைக் கூற வல்லவ னாதல்: பிறவாகிய அழகெல்லாம் அழகெனப்படா. இது தாழ்த்துக் கூறவேண்டு மென்பதும் அதனாலாம் பயனுங் கூறிற்று.
புலியூர்க் கேசிகன்
பணிவு உடையவனாகவும், இனிதாகச் சொல்பவனாகவும் ஆகுதல், ஒருவனுக்கு அணிகலனாகும்; பிறவெல்லாம் அணிகலன்கள் ஆகா
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | இனியவை கூறல் (Iniyavaikooral) |