குறள் (Kural) - 959

குறள் (Kural) 959
குறள் #959
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

பொருள்
விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம் அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

Tamil Transliteration
Nilaththil Kitandhamai Kaalkaattum Kaattum
Kulaththil Pirandhaarvaaich Chol.

மு.வரதராசனார்

இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும், அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச் சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.

சாலமன் பாப்பையா

நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசும் சொல் காட்டும்.

கலைஞர்

விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம். அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

பரிமேலழகர்

நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் - நிலத்தினியல்பை அதன் கண் முளைத்த முளை காட்டும்; குலத்திற்பிறந்தார் வாய்ச் சொல் காட்டும் - அதுபோலக் குலத்தின் இயல்பை அதன் கண் பிறந்தார் வாயிற் சொல் காட்டும். (கிடந்தமை உள்ளபடி முளைத்தமாத்திரத்தானே நன்மையும் தீமையும் தெரிதலின், இலை முதலிய கூறாராயினார். ஆகவே, பொருளினும் செயல் முதலியன வேண்டாவாயின. குலத்து இயல்பு அறிதற்கருவி கூறுவார் போன்று, இன்சொல் வேண்டுமென்றவாறாயிற்று.)

புலியூர்க் கேசிகன்

நிலத்தின் இயல்பினை அதனிடம் முளைத்த முளை காட்டும்; அவ்வாறே, நல்ல குலத்தில் பிறந்தவர்களது இயல்பினை அவர் வாய்ச்சொற்கள் எடுத்துக் காட்டும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)குடிமை (Kutimai)