குறள் (Kural) - 958

குறள் (Kural) 958
குறள் #958
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.

பொருள்
என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

Tamil Transliteration
Nalaththinkan Naarinmai Thondrin Avanaik
Kulaththinkan Aiyap Patum.

மு.வரதராசனார்

ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.

சாலமன் பாப்பையா

நல்ல குடும்பத்திலிருந்து வருகின்றவனிடம் அன்பு இல்லாது இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவன் தானா என்று அவனை இந்த உலகம் சந்தேகப்படும்.

கலைஞர்

என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

பரிமேலழகர்

நலத்தின்கண் நார் இன்மை தோன்றின் - குலநலமுடையனாய் வருகின்றவன்கண்ணே ஈரம் இன்மை உளதாமாயின்; அவனைக் குலத்தின்கண் ஐயப்படும் - அவனை அக்குலப்பிறப்பின் கண்ணே ஐயப்படும் உலகம். (நலமும் குலமும், ஆகுபெயர். நாரின்மையால் கொடாமையும் கடுஞ்சொல்லும் முதலிய கூறப்பட்டன. 'தோன்றின்' என்பது தோன்றாமை விளக்கி நின்றது. நலனுடையனாய் வருதலினிடையே இவை தோன்றலின், உள்ளது ஐயமாயிற்று. உலகம் என்பது அவாய் நிலையான் வந்தது. ஐயப்படல் என்பது பாடமாயின், ஐயப்படுக என விதியாக்கி உரைக்க. இவை இரண்டு பாட்டானும் வேறுபட்ட வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

குடிச்சிறப்போடு வருகின்றவனிடத்தே அருளில்லாத தன்மை தோன்றிற்றானால், அவனை அக் குடிப்பிறப்பு உடையவன் தானோ என்று கருதி உலகம் ஐயப்படும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)குடியியல் (Kudiyiyal)
அதிகாரம் (Adhigaram)குடிமை (Kutimai)