குறள் (Kural) - 94
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
பொருள்
இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு `நட்பில் வறுமை' எனும் துன்பமில்லை.
Tamil Transliteration
Thunpurooum Thuvvaamai Illaakum Yaarmaattum
Inpurooum Inso Lavarkku.
மு.வரதராசனார்
யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.
சாலமன் பாப்பையா
எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.
கலைஞர்
இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு நட்பில் வறுமை எனும் துன்பமில்லை.
பரிமேலழகர்
யார்மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்கு - எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு; துன்பு உறூஉம் துவ்வாமை இல்லாகும் - துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம். (நா முதலிய பொறிகள் சுவை முதலிய புலன்களை நுகராமை உடைமையின், 'துவ்வாமை' என்றார். 'யார் மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்குப் பகையும் நொதுமலும் இன்றி உள்ளது நட்பேஆம், ஆகவே அவர் எல்லாச் செல்வமும் எய்துவர்' என்பது கருத்து.)
ஞா.தேவநேயப் பாவாணர்
யார்மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்கு-யாரிடத்தும் இன்புறுத்தும் இன்சொல்லைச் சொல்வார்க்கு; துன்புஉறூஉம் துவ்வாமை இல்லாகும்-துன்புறுத்தும் வறுமை இலதாகும். ' உறூஉம் ' ஈரிடத்தும் பிறவினையான சொல்லிசை யளபெடை 'துவ்வாமை நுகராமை , துய்-து .எல்லாரிடத்தும் இன்சொற் சொல்வார்க்கு எல்லாரும் நண்பரும் அன்பருமாவராதலின் , எல்லாப் பொருளுங் கிடைக்குமென்றும் அதனால் வறுமையிராதென்றும் கூறினார் . வறுமையால் ஐம்புல நுகர்ச்சி கூடாமையின் வறுமையைத் துவ்வாமை யென்றார் . வறியவரைத் ' துவ்வாதவர் ' என்று முன்னரே ( சஉ) கூறியிருத்தல் காண்க .
மணக்குடவர்
துன்பமுறுவிக்கின்ற நுகராமையாகிய நல்குரவு இல்லையாகும். யாவர்மாட்டுங் கூற இன்பமுறுவிக்கின்ற இனிய சொல்லை யுடையார்க்கு.
புலியூர்க் கேசிகன்
எவரிடத்தும் இன்பம் உண்டாகத் தகுந்த இன்சொல்லைப் பேசுபவர்க்கு, துன்பத்தை மிகுதியாக்கும் வறுமையும் இல்லாமற் போகும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | இனியவை கூறல் (Iniyavaikooral) |