குறள் (Kural) - 93

குறள் (Kural) 93
குறள் #93
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.

பொருள்
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.

Tamil Transliteration
Mukaththaan Amarndhuinidhu Nokki Akaththaanaam
Inso Linadhe Aram.

மு.வரதராசனார்

முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.

சாலமன் பாப்பையா

பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.

கலைஞர்

முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.

பரிமேலழகர்

முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி - கண்டபொழுதே முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி; அகத்தான் ஆம் இன்சொலினதே அறம் - பின் நண்ணிய வழி, மனத்துடன் ஆகிய இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணதே அறம். ('நோக்கி' என்னும் வினையெச்சம் 'இன்சொல்' என அடையடுத்து நின்ற முதல்நிலைத் தொழிற் பெயர் கொண்டது. ஈதலின் கண்ணது அன்று என்றவாறு. இவை இரண்டு பாட்டானும் இன்முகத்தோடு கூடிய இன்சொல் முன்னரே பிணித்துக் கோடலின், விருந்தோம்புதற்கண் சிறந்தது என்பது கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

முகத்தா னமர்ந்தினிது நோக்கி-ஒருவரைக் கண்டபொழுதே முகமலர்ச்சியோடு விரும்பி இனிதாக நோக்கி அகத்தான் ஆம் இன்சொலினதே அறம்-பின்பு நெருங்கியவிடத்து அக மலர்ச்சியோடு கூடிய இனிய சொற்களைச் சொல்லுதலை யுடையதே அறமாவது. ஒருவரைக் கண்டபொழுதே ஒரு பொருளை யீதல் பொதுவாக இயையாமையின், முதற்கண் இன்முகங் காட்டலும் உடனும் அடுத்தும் இன்சொற் சொல்லுதலும் மக்களைப் பிணித்து மகிழ்விக்குந் தன்மையனவாதலின், விருந்தினரிடத்தும் இம்முறையைக் கையாள்வதே சிறந்ததென்றார்.

மணக்குடவர்

கண்ணாலே பொருந்தி, இனிதாக நோக்கி மனத்தோடே பொருந்திய இன்சொல் சொல்ல வல்லவனாயின் அதுதானே யறமாம்.

புலியூர்க் கேசிகன்

முகத்தோற்றத்தால் விருப்பத்தோடு இனிமையாகப் பார்த்து, உள்ளத்திலிருந்து வரும் இனிய சொற்களையும் சொல்லும் அதுவே, அறமாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)இனியவை கூறல் (Iniyavaikooral)