குறள் (Kural) - 930

குறள் (Kural) 930
குறள் #930
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

பொருள்
ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?.

Tamil Transliteration
Kallunnaap Pozhdhir Kaliththaanaik Kaanungaal
Ullaankol Untadhan Sorvu.

மு.வரதராசனார்

ஒருவன் தான் கள் உண்ணாத போது கள்ளுண்டு மயங்கினவளைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ.

சாலமன் பாப்பையா

போதைப் பொருளை ஒருவன் பயன்படுத்தாத போது, அதைப் பயன்படுத்தி இருப்பவனைப் பார்த்துத் தான் பயன்படுத்தும்போது தனக்கும் இத்தகைய நிலைதானே உண்டாகும் என்று எண்ணிப் பார்க்கமாட்டானோ?.

கலைஞர்

ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?.

பரிமேலழகர்

கள் உண்ணாப் போழ்தில் களித்தானை - கள் உண்பானொருவன் தான் அஃது உண்ணாது தெளிந்திருந்த பொழுதின்கண் உண்டுகளித்த பிறனைக் காணுமன்றே; காணுங்கால் உண்டதன் சோர்வு உள்ளான் கொல் - காணுங்கால் தான் உண்டபொழுது உளதாம் சோர்வினை அவன் சோர்வால் அதுவும் இற்றென்று கருதான் போலும். (சோர்வு - மனமொழி மெய்கள் தன் வயத்த அல்லவாதல். கருதல் அளவையான் அதன் இழுக்கினை உய்த்துணரின் ஒழியும் என இதனால் அஃது ஒழிதற் காரணம் கூறப்பட்டது.)?

புலியூர்க் கேசிகன்

கள்ளுண்பவன், தானுண்ணாதபோது, உண்டு களித்த பிறனைக் காண்பான் அல்லவோ! அப்படிக் காணும் போது, தன் நிலையும் இப்படித்தான் என்று நினைக்க மாட்டானோ?

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)கள்ளுண்ணாமை (Kallunnaamai)