குறள் (Kural) - 929

குறள் (Kural) 929
குறள் #929
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

பொருள்
குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்.

Tamil Transliteration
Kaliththaanaik Kaaranam Kaattudhal Keezhneerk
Kuliththaanaith Theeththureei Atru.

மு.வரதராசனார்

கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டி தெளிவித்தல், நீரின் கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்கு கொண்டு தேடினாற் போன்றது.

சாலமன் பாப்பையா

போதைப் பொருளைப் பயன்படுத்துபவனைத் திருத்தப் பல்வேறு காரணம் காட்டுவது நீருக்குள் மூழ்கி இருப்பவனைத் தீப்பந்தத்தால் தேடுவதுபோல் ஆகும்.

கலைஞர்

குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்.

பரிமேலழகர்

களித்தானைக் காரணம் காட்டுதல் - கள்ளுண்டு களித்தான் ஒருவனை இஃது ஆகாதென்று பிறனொருவன் காரணம் காட்டித் தெளிவித்தல்; நீர்க்கீழ்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று - நீருள் மூழ்கினான் ஒருவனைப் பிறனொருவன் விளக்கினால் நாடுதலை யொக்கும். ('களித்தானை' என்னும் இரண்டாவது, 'அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானோ' (கலித்.மருதம் -7) என்புழிப்போல நின்றது. நீருள் விளக்குச் செல்லாதாற்போல அவன் மனத்துக் காரணம் செல்லாது என்பதாம். இதனான் அவனைத் தெளிவித்தல் முடியாது என்பது கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

கள்ளுண்டு களித்தவனைக் காட்டி ‘இ·து நினைக்கும் ஆகாது’ என்று கூறித் தெளிவித்தல், நீரினுள் மூழ்கினான் ஒருவனை விளக்கினால் தேடுவதைப் போல் முடியாத செயலாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)கள்ளுண்ணாமை (Kallunnaamai)