குறள் (Kural) - 92

குறள் (Kural) 92
குறள் #92
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

பொருள்
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்.

Tamil Transliteration
Akanamarndhu Eedhalin Nandre Mukanamarndhu
Insolan Aakap Perin.

மு.வரதராசனார்

முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.

சாலமன் பாப்பையா

முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது.

கலைஞர்

முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்.

பரிமேலழகர்

அகன் அமர்ந்து ஈதலின் நன்று - நெஞ்சு உவந்து ஒருவற்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலினும் நன்று; முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் - கண்டபொழுதே முகம் இனியனாய் அதனொடு இனிய சொல்லையும் உடையனாகப் பெறின். (இன்முகத்தோடு கூடிய இன்சொல் ஈதல் போலப் பொருள் வயத்தது அன்றித் தன் வயத்தது ஆயினும், அறநெஞ்சுடையார்க்கு அல்லது இயல்பாக இன்மையின் அதனினும் அரிது என்னும் கருத்தான், 'இன்சொலன் ஆகப் பெறின்' என்றார்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

முகன் அமர்ந்து இன்சொலனாகப் பெறின்-ஒருவரைக் கண்டபொழுதே முகமலர்ந்து இனிய சொல்லும் உடையனாகப் பெறின்; அகன் அமர்ந்து ஈதலின் நன்று-அது மனமுவந்து ஒரு பொருளைக் கொடுத்தலினும் சிறந்ததாம். வெறுநோக்கினும் வெறுஞ் சொல்லினும் ஒரு பொருளைக் கொடுத்தலே உண்மையிற் சிறந்ததாயினும், மக்கள் பொதுவாக வெளிக்கோலத்திற்கே வயப்படுவதால், அகமலர்ச்சி வெளிப்படாத கொடையினும் முகமலர்ச்சியோடு கூடிய இன்சொல்லே நல்ல தென்றார்.

மணக்குடவர்

மனம் பொருந்திக் கொடுத்தலினும் நன்று: முகம் பொருந்தி இனிமைச்சொல் சொல்ல வல்லவனாயின்.

புலியூர்க் கேசிகன்

முகமலர்ச்சியோடு இனிதாகச் சொல்லும் இயல்பும் பெற்றவனானால், அது, அவன் மனமகிழ்ச்சியோடு கொடுக்கும் பொருளை விட நல்லதாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)இனியவை கூறல் (Iniyavaikooral)