குறள் (Kural) - 925

குறள் (Kural) 925
குறள் #925
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

பொருள்
ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்.

Tamil Transliteration
Kaiyari Yaamai Utaiththe Porulkotuththu
Meyyari Yaamai Kolal.

மு.வரதராசனார்

விளைப் பொருள் கொடுத்து கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.

சாலமன் பாப்பையா

விலை கொடுத்தத் தன்னை அறியாத உடல் மயக்கத்தை வாங்குவது செயல் செய்யும் அறிவில்லாமை.

கலைஞர்

ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்.

பரிமேலழகர்

பொருள் கொடுத்து மெய் அறியாமை கொளல் - ஒருவன் விலைப்பொருளைக் கொடுத்துக் கள்ளால் தனக்கு மெய்ம்மறப்பினைக் கொள்ளுதல்; கை அறியாமை உடைத்து - அவன் பழவினைப் பயனாய செய்வதறியாமையைத் தனக்குக் காரணமாக உடைத்து. (தன்னை அறியாமை சொல்லவே, ஒழிந்தன யாவும் அறியாமை சொல்லல் வேண்டாவாயிற்று. கை அப்பொருட்டாதல் 'பழனுடைப் பெருமரம் வீழ்ந்தெனக் கையற்று' (புறநா-209) என்பதனானும் அறிக. அறிவார் விலை கொடுத்து ஒன்றனைக் கொள்ளுங்கால் தீயது கொள்ளாமையின்,மெய்யறியாமை கொளல் முன்னை அறியாமையான் வந்தது என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

தன் கைப்பொருளைக் கொடுத்துத் தன்னுடலை மறக்கும் அறியாமையைக் கொள்ளுதல், அவன் பழவினைப் பயனையே தனக்குக் காரணமாக உடையதாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)கள்ளுண்ணாமை (Kallunnaamai)