குறள் (Kural) - 924

குறள் (Kural) 924
குறள் #924
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

பொருள்
மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்.

Tamil Transliteration
Naanennum Nallaal Purangotukkum Kallennum
Penaap Perungutrath Thaarkku.

மு.வரதராசனார்

நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தக்காத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செய்வாள்.

சாலமன் பாப்பையா

போதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங் குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப் போய் விடுவாள்.

கலைஞர்

மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்.

பரிமேலழகர்

கள் என்னும் பேணாப் பெருங்குற்றத்தார்க்கு - கள் என்று சொல்லப்படுகின்ற யாவரும் இகழும் மிக்க குற்றத்தினையுடையாரை; நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் - நாண் என்று சொல்லப்படுகின்ற உயர்ந்தவள் நோக்குதற்கு அஞ்சி அவர்க்கு எதிர்முகமாகாள். (காணுதற்கும் அஞ்சி உலகத்தார் சேய்மைக்கண்ணே நீங்குவராகலின் 'பேணா' என்றும்,பின் ஒருவாற்றானும் கழுவப்படாமையின், 'பெருங்குற்றம்' என்றும், இழிந்தோர்பால் நில்லாமையின் 'நல்லாள்' என்றும் கூறினார். பெண்பாலாக்கியது வடமொழி முறைமை பற்றி. இவை மூன்று பாட்டானும் ஒளியிழத்தற் காரணம் கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

‘கள்’ என்னும் யாவரும் இகழும் பெருங்குற்றத்தை உடையவரை, ‘நாண்’ என்று சொல்லப்படுகின்ற உயர்ந்தவள், பார்ப்பதற்கும் அஞ்சி முகத்தைத் திருப்பிக் கொள்வாள்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)கள்ளுண்ணாமை (Kallunnaamai)