குறள் (Kural) - 91
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
பொருள்
ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.
Tamil Transliteration
Insolaal Eeram Alaiip Patiruilavaam
Semporul Kantaarvaaich Chol.
மு.வரதராசனார்
ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.
சாலமன் பாப்பையா
அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.
கலைஞர்
அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
பரிமேலழகர்
இன்சொல் - இன்சொலாவன; ஈரம் அளைஇப் படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் - அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் வாயிற்சொற்கள். (ஆல் அசைநிலை. அன்போடு கலத்தல் - அன்புடைமையை வெளிப்படுத்தல். படிறு இன்மை - வாய்மை. மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின் செம்பொருள் எனப்பட்டது. 'இலவாம் சொல்' என இயையும். 'வாய்' என வேண்டாது கூறினார், தீயசொல் பயிலா என்பது அறிவித்தற்கு. இதனான் இன்சொற்கு இலக்கணம் கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
இன்சொல்-இனிய சொல்லாவன; ஈரம் அளைஇ-அன்பு கலந்து; படிறு இலவாம்-வஞ்சனை யில்லாத; செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்-மெய்ப் பொருளையறிந்த சான்றோர் வாய்ச் சொற்கள். 'ஆல்' அசைநிலை. படிறு-பொய். எப்பாலவரும் இயையும் உண்மைப்பொருள் என்றும் மாறாது நேராயிருத்தலின் 'செம்பொருள்' என்றார். 'செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்' என்றது, அவர் வாயினின்று வருஞ்சொற்களெல்லாம் என்றும் இனியனவே என்பதை உணர்த்தற்கு; 'அளைஇ' சொல்லிசை யளபெடை.
மணக்குடவர்
ஒருவன் இனியவாகச் சொல்லுஞ் சொற்கள் இன்பத்தைப் பயத்தலைக் காண்பான். அதற்கு மறுதலையாகிய வன்சொல்லை வழங்குவது எப்பயனை நோக்கியோ?
புலியூர்க் கேசிகன்
செம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச் சொற்கள், இனிய சொற்களாய், அன்பு கலந்ததாய், வஞ்சம் இல்லாததாய் இருக்கும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | இனியவை கூறல் (Iniyavaikooral) |