குறள் (Kural) - 90

குறள் (Kural) 90
குறள் #90
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.

பொருள்
அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.

Tamil Transliteration
Moppak Kuzhaiyum Anichcham Mukandhirindhu
Nokkak Kuzhaiyum Virundhu.

மு.வரதராசனார்

அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.

சாலமன் பாப்பையா

தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.

கலைஞர்

அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.

பரிமேலழகர்

அனிச்சம் மோப்பக் குழையும் - அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது; விருந்து முகம் திரிந்து நோக்கக்குழையும்- விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர். (அனிச்சம் ஆகுபெயர். சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்ட வழி நன்று ஆற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அனிச்சம் மோப்பக் குழையும்-இயல்பாக மென்மையாகவுள்ள பூக்களுள்ளும் மிக மென்மையானதாகச் சொல்லப்படும் அனிச்சப் பூவும் மோந்தால் மட்டும் வாடும்; விருந்து முகம் திரிந்து நோக்கக்குழையும்-ஆனால், தன்மானமுள்ள விருந்தினரோ, வீட்டாரின் முகம் வேறுபட்டு நோக்கிய மட்டில் வாடிவிடுவர். 'அனிச்சம்' முதலாகுபெயர். தொட்டு முகந்தால் வாடும் அனிச்ச மலரினும் தொலைவில் முகம் வேறுபட்டு நோக்கிய மட்டில் வாடும் விருந்தினர் மென்மையராதலின், விருந்தோம்புவார் இன் சொற்கும் இன்செயற்கும் முன் இன்முகங் காட்டவேண்டுமென்பது இங்குக் கூறப்பட்டது.

மணக்குடவர்

எல்லா மலரினும் மெல்லிதாகிய அனிச்சப்பூ மோந்தாலல்லது வாடாது: விருந்தினரை முகந்திரிந்து நோக்க அவர் வாடுவர். இது முகம்நோக்கி யினிமை கூறவேண்டுமென்றது.

புலியூர்க் கேசிகன்

அனிச்ச மலர் மோந்தவுடனே வாடிவிடும்; முகம் மாறுபட்டு நோக்கிய உடனே விருந்தினரும் உள்ளம் வாடி விடுவார்கள்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)விருந்தோம்பல் (Virundhompal)