குறள் (Kural) - 903

குறள் (Kural) 903
குறள் #903
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.

பொருள்
நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும்.

Tamil Transliteration
Illaalkan Thaazhndha Iyalpinmai Egngnaandrum
Nallaarul Naanuth Tharum.

மு.வரதராசனார்

மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைச் தரும்.

சாலமன் பாப்பையா

மனைவியிடம் பணிந்து போகும் பயம் ஒருவனிடம் இருந்தால், இது இல்லாத நல்லவர் முன்னே அவனுக்கு எப்போதும் வெட்கத்தைக் கொடுக்கும்.

கலைஞர்

நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும்.

பரிமேலழகர்

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பு இன்மை - ஒருவன் இல்லாள் மாட்டுத் தாழ்தற்கு ஏதுவாய அச்சம்; நல்லாருள் நாணு எஞ்ஞான்றும் தரும் - அஃது இலராய நல்லாரிடைச் செல்லுங்கால் நாணுதலை அவனுக்கு எக்காலத்தும் கொடுக்கும். (அவள் தான் அஞ்சி ஒழுகுதல் இயல்பாகலின், அவளை அஞ்சுதல் இயல்பின்மையாயிற்று. அங்ஙனம் அஞ்சியொழுகுதலின், அவளை நியமிப்பார் இல்லையாம், ஆகவே, எல்லாக்குற்றமும் விளையும் என்பது நோக்கி, 'எஞ்ஞான்றும் நாணுத்தரும்' என்றார்.)

புலியூர்க் கேசிகன்

தன் இல்லாளிடத்தே தாழ்ந்து போவதற்கு ஏதுவான ஒருவனது அச்சம், அ·து இல்லாத நல்லோர்களிடையே செல்லும் காலத்தில், எப்போதும் நாணத்தையே தரும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)பெண்வழிச் சேறல் (Penvazhichcheral)