குறள் (Kural) - 902

குறள் (Kural) 902
குறள் #902
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.

பொருள்
எற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும்.

Tamil Transliteration
Penaadhu Penvizhaivaan Aakkam Periyadhor
Naanaaka Naanuth Tharum.

மு.வரதராசனார்

கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்கச் செயலாக நாணத்தைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா

தன் ஆண்மையை எண்ணாமல் மனைவியின் விருப்பத்தையே விரும்புபவன் வசம் இருக்கும் செல்வம், ஆண்களுக்கு எல்லாம் வெட்கம் தருவதுடன் அவனுக்கும் வெட்கம் உண்டாக்கும்.

கலைஞர்

ஏற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும்.

பரிமேலழகர்

பேணாது பெண் விழைவான் ஆக்கம் - தன் ஆண்மையை விட்டு மனையாளது பெண்மையை விழைவான் எய்தி நின்ற செல்வம்; பெரியது ஓர் நாண் ஆக நாணுத் தரும் - இவ்வுலகத்து ஆண்பாலார்க் கெல்லாம் பெரியதோர் நாண் உண்டாகத் தனக்கும் நாணுதலைக் கொடுக்கும். (எய்தி நின்றதாயிற்று, படைக்கும் ஆற்றல் இலனாகலின். அச்செல்வத்தால் ஈதலும் துய்த்தலும் முதலிய பயன் கொள்வாள் அவள் ஆகலின், அவ்வாண்மைச் செய்கை அவள் கண்ணதாயிற்று என்று ஆண்பாலார் யாவரும் நாண,அதனால் தன் ஆண்மையின்மை அறிந்து, பின் தானும் நாணும் என்பது நோக்கி, 'பெரியதோர் நாணாக நாணுத்தரும்' என்றார். இவை இரண்டு பாட்டானும் மனை விழைதற் குற்றம் கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

தன் ஆண்மையைப் பேணாது, மனையாளது பெண்மையையே விரும்புகிறவன் செல்வம், இவ்வுலகத்து ஆண்பாலர்க்குப் பெரியதோர் நாணமாக வெட்கம் தரும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)பெண்வழிச் சேறல் (Penvazhichcheral)