குறள் (Kural) - 89

குறள் (Kural) 89
குறள் #89
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

பொருள்
விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.

Tamil Transliteration
Utaimaiyul Inmai Virundhompal Ompaa
Matamai Matavaarkan Untu.

மு.வரதராசனார்

செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.

சாலமன் பாப்பையா

செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.

கலைஞர்

விருந்தினரை
வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக
இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.

பரிமேலழகர்

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை -உடைமைக் காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை; மடவார்கண் உண்டு - அஃது அறிந்தார் மாட்டு உளதாகாது; பேதையார் மாட்டே உளதாம். (உடைமை - பொருளுடையனாம் தன்மை. பொருளால் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மை ஆக்கலின், மடமையை இன்மையாக உபசரித்தார்.பேதைமையான் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஒம்பா மடமை-செல்வக் காலத்து வறுமையாவது விருந்தோம்பலைப் புறக்கணிக்கும் பேதைமை; மடவார்கண் உண்டு-அது பேதையரிடத்திலேயே உள்ளது. செல்வத்தின் பயனை இழப்பித்து அதை வறுமையாக மாற்றுவதால், பேதமையை வறுமையாகச் சார்த்திக் கூறினார்.

மணக்குடவர்

உடைமையின் கண்ணே யில்லாமைபோல, விருந்தினர்க்கு அளித்தலைப் போற்றாத பேதைமை, பேதைமையார் மாட்டேயுளதாம்.

புலியூர்க் கேசிகன்

பொருள் உடைமையுள்ளும் ‘இல்லாமை’ என்பது, விருந்தோம்பலைப் பேணாத மடமையே; அஃது அறிவற்றவரிடமே உளதாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)விருந்தோம்பல் (Virundhompal)