குறள் (Kural) - 897

குறள் (Kural) 897
குறள் #897
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.

பொருள்
பெருஞ்செல்வம் குவித்துக்கொண்டு என்னதான் வகைவகையான வாழ்க்கைச் சுகங்களை அனுபவித்தாலும், தகுதி வாய்ந்த பெரியோரின் கோபத்துக்கு முன்னால் அவையனைத்தும் பயனற்றுப் போகும்.

Tamil Transliteration
Vakaimaanta Vaazhkkaiyum Vaanporulum Ennaam
Thakaimaanta Thakkaar Serin.

மு.வரதராசனார்

தகுதியால் சிறப்புற்ற பெரியவர் ஒருவனை வெகுண்டால் அவனுக்கு பலவகையால் மாண்புற்ற வாழ்க்கையும் பெரும் பொருளும் இருந்தும் என்ன பயன்.

சாலமன் பாப்பையா

குணங்களால் சிறந்த பெரியவர்கள் சினங்கொள்வார் என்றால், பலத்தால் சிறந்த வாழ்க்கையும், பெரும்பொருளும் எதற்கு ஆகும்?.

கலைஞர்

பெருஞ்செல்வம் குவித்துக்கொண்டு என்னதான் வகைவகையான வாழ்க்கைச் சுகங்களை அனுபவித்தாலும், தகுதி வாய்ந்த பெரியோரின் கோபத்துக்கு முன்னால் அவையனைத்தும் பயனற்றுப் போகும்.

பரிமேலழகர்

தகை மாண்ட தக்கார் செறின் - சாப அருள்கட்கு ஏது ஆய பெருமை மாட்சிமைப்பட்ட அருந்தவர் அரசனை வெகுள்வராயின்; வகைமாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என்னாம் - உறுப்பழகு பெற்ற அவன் அரசாட்சியும் ஈட்டி வைத்த பெரும் பொருளும் என் பட்டுவிடும்? (உறுப்பு - அமைச்சு, நாடு, அரண், படை என இவை. 'செறின்' என்பது அவர் செறாமை தோன்ற நின்றது இவ்வெச்சத்தான். முன் வருவனவற்றிற்கும் இஃது ஒக்கும். அரசர் தம் செல்வக்களிப்பான் அருந்தவர் மாட்டுப் பிழை செய்வாராயின், அச்செல்வம் அவர் வெகுளித்தீயான் ஒரு கணத்துள்ளே வெந்துவிடும் என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

சாபமிடுதலும் அருள்செய்தலும் ஆகிய தகுதிகளால் சிறந்த தவத்தோர் சினங்கொண்டால், பலவகையாலும் சிறந்த வாழ்க்கையும், பெரும்பொருளும் அழிந்து விடும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pizhaiyaamai)