குறள் (Kural) - 896

குறள் (Kural) 896
குறள் #896
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

பொருள்
நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்; ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது.

Tamil Transliteration
Eriyaal Sutappatinum Uyvuntaam Uyyaar
Periyaarp Pizhaiththozhuku Vaar.

மு.வரதராசனார்

தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும், ஆற்றல் மிகுந்த பெரியவரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பி பிழைக்க முடியாது.

சாலமன் பாப்பையா

தீயால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரியவர்களை அவமதித்து வாழ்பவர் பிழைக்கவேமாட்டார்.

கலைஞர்

நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்; ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது.

பரிமேலழகர்

எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம் - காட்டிடைச் சென்றானொருவன் ஆண்டைத் தீயாற் சுடப்பட்டானாயினும் ஒருவாற்றான் உயிருய்தல் கூடும்; பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார் உய்யார் - தவத்தாற் பெரியாரைப் பிழைத்து ஒழுகுவார், எவ்வாற்றானும் உயிருய்யார். (தீ முன் உடம்பினைக் கதுவி அதுவழியாக உயிர்மேற் சேறலின், இடையே உய்யவும் கூடும். அருந்தவர் வெகுளி அன்னதன்றித் தான் நிற்பது கணமாய் அதற்குள்ளே யாவர்க்கும் காத்தல் அரிதாகலின், (குறள்-6) அது கூடாதாகலான், அதற்கு ஏதுவாய பிழை செய்யற்க என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

காட்டினுள் சென்றவன், காட்டுத் தீயால் சுடப்பட்டாலும், ஒருவழியாக உயிர்பிழைத்து எவ்விடத்துச் சென்றாலும், எங்கும் உயிர் பிழைத்திருக்கவே மாட்டார்கள்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pizhaiyaamai)