குறள் (Kural) - 893

குறள் (Kural) 893
குறள் #893
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.

பொருள்
ஒருவன், தன்னைத்தானே கெடுத்துக் கொள்ள விரும்பினால் பகையை நினைத்த மாத்திரத்தில் அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர்களை யார் பேச்சையும் கேட்காமலே இழித்துப் பேசலாம்.

Tamil Transliteration
Ketalventin Kelaadhu Seyka Atalventin
Aatru Pavarkan Izhukku.

மு.வரதராசனார்

அழிக்க வேண்டுமானால் அவ்வாறே செய்து முடிக்க வல்லவரிடத்தில் தவறு செய்தலை, ஒருவன் கெட வேண்டுமானால் கேளாமலேச் செய்யலாம்.

சாலமன் பாப்பையா

ஒருவன் தான் அழிய எண்ணினால் பிறரை அழிப்பதைச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவர்களிடம், நீதிநூல்கள் சொல்லும் வழிகளையும் எண்ணிப் பாராமல் பிழை செய்க.

கலைஞர்

ஒருவன், தன்னைத்தானே கெடுத்துக் கொள்ள விரும்பினால் பகையை நினைத்த மாத்திரத்தில் அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர்களை யார் பேச்சையும் கேட்காமலே இழித்துப் பேசலாம்.

பரிமேலழகர்

அடல் வேண்டின் ஆற்றுபவர்கண் இழுக்கு - வேற்று வேந்தரைக் கோறல் வேண்டிய வழி அதனை அப்பொழுதே செய்யவல்ல வேந்தர்மாட்டுப் பிழையினை; கெடல் வேண்டின் கேளாதுசெய்க - தான் கெடுதல் வேண்டினானாயின், ஒருவன் நீதிநூலைக் கடந்து செய்க. (அப்பெரியாரைக் 'காலனும் காலம் பார்க்கும் பாராது -வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய - வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தர்' (புறநா.41) என்றார் பிறரும்.நீதி நூல் 'செய்யலாகாது' என்று கூறலின், 'கேளாது' என்றார்

புலியூர்க் கேசிகன்

தான் விரும்பிய பொழுதிலேயே பகையரசரைக் கொல்லவல்ல வேந்தரிடத்தே, தான் கெடுதலை வேண்டுபவன், நீதி நூலைக் கடந்து பிழைகளைச் செய்வானாக!

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pizhaiyaamai)