குறள் (Kural) - 892
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.
பொருள்
பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்.
Tamil Transliteration
Periyaaraip Penaadhu Ozhukir Periyaaraal
Peraa Itumpai Tharum.
மு.வரதராசனார்
ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.
சாலமன் பாப்பையா
பெரியவர்களை மதிக்காமல் நடந்தால், அப்பெரியவர்களால் தீராத துன்பம் வரும்.
கலைஞர்
பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்.
பரிமேலழகர்
பெரியாரைப் பேணாது ஒழுகின் - ஆற்றல்களால் பெரியராயினாரை வேந்தன் நன்கு மதியாது அவமதித்து ஒழுகுவாராயின், பெரியாரால் பேரா இடும்பை தரும் - அவ்வொழுக்கம் அப்பெரியாரால் அவர்க்கு எஞ்ஞான்றும் நீங்காத துன்பங்களைக் கொடுக்கும். (அத்துன்பங்களாவன, இருமையினும் இடையறாது வரும் மூவகைத் துன்பங்களும் ஆம், அவையெல்லாம் தாமே செய்துகொள்கின்றனர் என்பது தோன்ற, ஒழுக்கத்தை வினை முதலாக்கியும் பெரியாரைக் கருவியாக்கியும் கூறினார். பொது வகையால் அவரைப் பிழைத்தற்குற்றம் இதனாற் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையாற் கூறுப.)
புலியூர்க் கேசிகன்
பெரியோர்களை நன்கு மதிக்காமல் நடந்தால், அப்பெரியோரால் அவருக்கு எவ்விடத்தும் நீங்காத துன்பங்களை அது கொடுத்துவிடும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் (Natpiyal) |
அதிகாரம் (Adhigaram) | பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pizhaiyaamai) |