குறள் (Kural) - 889
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு.
பொருள்
எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால் பெருங்கேடு விளையும்.
Tamil Transliteration
Etpaka Vanna Sirumaiththe Aayinum
Utpakai Ulladhaang Ketu.
மு.வரதராசனார்
எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.
சாலமன் பாப்பையா
எள்ளின் பிளவு போல உட்பகை சிறியதாக இருக்கலாம்; என்றாலம் உட்பகை உள்ள கட்சிக்குள்ளேயே அதன் கேடும் இருக்கிறதாம்.
கலைஞர்
எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால் பெருங்கேடு விளையும்.
பரிமேலழகர்
உட்பகை எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் - அரசனது உட்பகை அவன் பெருமையை நோக்க எள்ளின் பிளவை ஒத்த சிறுமை உடைத்தேயாயினும்; கேடு உள்ளதாம் - பெருமையெல்லாம் அழிய வரும் கேடு அதன் அகத்ததாம். (எத்துணையும் பெரிதாய கேடு, தனக்கு எல்லை வருந்துணையும் எத்துணையும் சிறிதாய உட்பகையுள்ளே அடங்கியிருந்து, வந்தால் வெளிப்பட்டு நிற்கும் என்பதாம். இதனான் அது, சிறிது என்று இகழப்படாது என்பது கூறப்பட்டது.)
புலியூர்க் கேசிகன்
ஒருவனது உட்பகை, அவன் பெருமையை நோக்க, எள்ளின் பிளவு போன்று சிறிதானது என்றாலும், அதனாலும், அவன் பெருமை எல்லாம் பின் காலத்தில் கெட்டுவிடும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் (Natpiyal) |
அதிகாரம் (Adhigaram) | உட்பகை (Utpakai) |