குறள் (Kural) - 888

குறள் (Kural) 888
குறள் #888
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.

பொருள்
அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும் குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும்.

Tamil Transliteration
Aramporudha Ponpolath Theyum Uramporudhu
Utpakai Utra Kuti.

மு.வரதராசனார்

உட்பகை உண்டான குடி அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்பு போல் வலிமை குறைக்கப் பட்டு தேய்ந்து போகும்.

சாலமன் பாப்பையா

அரத்தால் தேய்க்கப்படும் இரும்பு தேய்வது போல, உட்பகை கொண்ட குடு்ம்‌பமும் கட்சியும் அரசும் தமக்கும் பொருது தம் பலம் இழக்கும்.

கலைஞர்

அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும் குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும்.

பரிமேலழகர்

உட்பகை உற்ற குடி - முன் வளர்ந்து வந்ததாயினும் உட்பகையுண்டாய குடி, அரம் பொருத பொன்போலப் பொருது உரம் தேயும் - அரத்தாற் பொரப்பட்ட இரும்பு போல அதனால் பொரப்பட்டு வலி தேயும். ('பொருது' என்னும் செயப்பாட்டு வினையெச்சம் 'தேயும்' என்னும் வினை கொண்டது. அஃது, உரத்தின் தொழிலாயினும் குடிமேல் ஏற்றுதலின், வினை முதல்வினை ஆயிற்று. காரியஞ் செய்வதுபோன்று பொருந்தி மெல்லமெல்லப் பிரிவித்தலான், வலிதேய்ந்து விடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவன் குடிக்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

முன் உயர்ந்து வளர்ந்ததே என்றாலும், உட்பகையுள்ள குடியானது, அரத்தினால் அராவப்பட்ட இரும்பைப் போல் நாளுக்கு நாள் தேய்ந்து அழிந்து போகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)உட்பகை (Utpakai)