குறள் (Kural) - 886

குறள் (Kural) 886
குறள் #886
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.

பொருள்
ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்.

Tamil Transliteration
Ondraamai Ondriyaar Katpatin Egngnaandrum
Pondraamai Ondral Aridhu.

மு.வரதராசனார்

ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.

சாலமன் பாப்பையா

தன்னுடன் இருப்பவரின் பகை தோன்றுமானால், ஆட்சியின் அழிவைத் தடுக்க ஒருபோதும் முடியாது.

கலைஞர்

ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்.

பரிமேலழகர்

ஒன்றாமை ஒன்றியார்கண் படின் - பகைமை, தனக்கு உள்ளாயினார் மாட்டே பிறக்குமாயின்; பொன்றாமை ஒன்றல் எஞ்ஞான்றும் அரிது - அரசனுக்கு இறவாமை கூடுதல் எஞ்ஞான்றும் அரிது. (பொருள் படை முதலிய உறுப்புக்களாற் பெரியனாய காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். இவை நான்கு பாட்டானும், அதனால் தனக்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

தனக்கு உட்பட்டவர் இடத்திலேயே பகைமை தோன்றினால், தனக்குச் சாவாதிருப்பது கைகூடுவது என்பதும் எக்காலத்திலும் அரியதாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)உட்பகை (Utpakai)